சங்குப்பிட்டி பாலத்தால் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் திரு. வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

குறித்த பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் பற்றி மக்கள் சந்தேகிப்பது தொடர்பில் வெளியான செய்தியைத் தொடர்ந்து இன்று குறித்த பாலத்தை பார்வையிட்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் கடந்த 29ம் திகதி தொலைக்காட்சி செய்தி வெளியான நிலையில், இதுதொடர்பில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பணிப்பிற்கமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பார்வையிட்டதுடன், ஏற்பட்டுள்ள சிறிய பாதிப்புக்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதேவேளை இன்றைய தினம் வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் திரு. வசந்தகுமார், வட மாகாண பணிப்பாளர் திரு. குரூஸ், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் செயலாளர் குலேந்திரன் சிவராம் உள்ளிட்டோர் இப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.இதன்போது வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்பணிப்பாளர் திரு. வசந்தகுமார் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.இந்த பாலம் 120 ஆண்டுகால பாவனைக்கு ஏற்ற வகையில் நிர்மானிக்கப்பட்டது. தற்பொழுது சேதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகள் உவர் காற்றினால் ஏற்பட்ட சிறிய பாதிப்புக்களே ஆகும். இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.2011ம் ஆண்டு திறக்கப்பட்ட குறித்த பாலத்தினை 2016ம் ஆண்டு திருத்தம் செய்தோம். 5 ஆண்டுகளிற்கு ஒருமுறை திருத்தங்களை செய்வோம். தற்பொழுது ஆரம்ப திருத்தல் பணிகளை செய்கின்றோம். தற்பொழுது உள்ள கொவிட் சூழல் காரணமாக முழுமையாக செய்ய முடியாதுள்ளது.அதற்கு தேர்ச்சி பெற்ற ஊழியர்களை அழைத்து வந்து திருத்தம் செய்ய வேண்டும். விரைவில் அந்த பணி முழுமை அடையும். எனவே, போக்குவரத்து செய்வது தொடர்பில் மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி வீதி மின்விளக்குகளும் சீர் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *